பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

சில புத்தகங்களை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அப்படி ஒரு புத்தகம்தான் பூனாச்சி எனக்கு. அது இதுவரை நான் படித்திராத விலங்குகளைப பற்றி இருந்ததாலா அல்லது புத்தகத்தின் ஆசிரியர் பெருமாள் முருகன் கையாண்ட தேன் தடவிய மொழி நடையினாலா என்று கேட்டால் இரண்டும் தான் என்று தோன்றுகிறது. பூனாச்சி ஒரு ஆட்டுக்குட்டியாக இருந்தாலும்,  ஒவ்வொரு பருவத்திலும் அவள் அனுபவிக்கும் ஆனந்தம், பயம், காதல், வெறுப்பு, வலி என அனைத்து உணர்வுகளும், அவளை ஒரு பெண் போலவே எண்ணி நம்மை கதையுடன் பயணிக்க வைக்கிறது. 

ஒரு ஊரில் ஒரு கிழவனும் கிழவியும் தன் ஒரே ஒரு மகளை கட்டிக்குடுத்துவிட்டு தனக்கென இருந்த சிறிய நிலத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். விவசாயத்தில் மழை பொய்த்துப் போனதால், தங்கள் மொத்த வருமானத்திற்கும் வெள்ளாடுகளையும் , ஒரு எருமையையும் நம்பியே இருந்தார்கள். நாய் வளர்த்தால் ஒரு மனிதனுக்கான இருவேளை உணவாவது அதற்கு தர வேண்டும் என்பதால் காவலுக்கு ஒரு நாயைக்கூட வளர்க்கமுடியவில்லை அவர்களால். இந்த சூழ்நிலையில், பகாசுரன் போல வளைந்த ஒரு ஆள் புழுக்கை போல சிறிய உருவம் கொண்ட பூங்குட்டி(இளம் வெள்ளாடு) ஒன்றை கிழவனிடம் ஒப்படைக்கிறான். மேலும் அது ஏழு குட்டிகள் போடும் அதிசய ஆடு என்று சொல்கிறான். பிறந்து ஓரிரு நாட்களே ஆன அந்த மூட்டுக்குட்டி (பெண் வெள்ளாடு) இவர்கள் வீட்டிற்கு வருகிறது. உடல் பெலமற்று பார்ப்பதற்கு பூனைக்குட்டி போல இருப்பதால், கிழவி இதற்கு பூனாச்சி என்று பெயரிட்டாள். 

பூனாச்சி வந்த அன்று இரவு முதன்முறையாக இரவில் விளக்கு ஏற்றி வைக்கிறாள் கிழவி. வயதான காலத்தில் தன் சோற்றுக்கு உழைப்பதும், பொழுதைக்கழிப்பதுமாக இருக்கும் கிழவனும் கிழவியும் மனது விட்டு பேசியே வெகு நாட்கள் ஆகியிருந்தன. பூனாச்சி வந்த அன்று , அது எப்படி இவர்களிடம் வந்தது, அதை எப்படி வளர்ப்பது என்பது பற்றி எல்லாம் இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பூனாச்சி வந்த நேரம் அவர்களிடம் ஒரு தாய் ஆடு இருந்தது. அதனிடம் சில நாட்கள் பூனாச்சிக்கு பாலூட்டினாள் கிழவி. ஆனால், தாயாடு சில நாட்களிலேயே தன் குட்டிகள் பால் ஊட்டும் விதத்தை தெரிந்துகொண்டு பூனாச்சிக்கு கள்ளமடி காட்டியது. அப்போது கிழவி தாயாட்டிடம்,

‘அட ஆயா, உம்பிள்ளைகளுக்கு பாலுக்குடுக்க வேண்டான்னு ஆரு சொன்னா?

நல்லா மகராசியாக் குடு. இதும் ஒரு சீவந்தான். பொங்கு பொங்குனு கெடக்குதே.

ஒரு நாலு வாயி குடுத்துக் காப்பாத்துனா என்ன? உம்பிள்ளைவதான் பொறுக்கித் திங்கறாங்களே.

இந்தப் பூனாச்சிதான் உம்வளத்தக் கொண்டுக்கிட்டுப் போயர்றாளா? ‘

என்று பேசிப் பார்த்தாள். பலனில்லை என்பதால், ஊட்டுச்சவ்வில் கம்மஞ்சோறு நீத்தண்ணி, தேங்காய் புண்ணாக்கு தண்ணி என்று குடுத்து பூனாச்சியை வளர்த்தாள் கிழவி. 

கதையாசிரியர் பெருமாள் முருகன் உருவாக்கிய இந்தக் கதை உலகத்தில், ராசாங்கம் என்று ஒன்று இருந்தது. பிறந்தது ஆடோ மனிதனோ ராசாங்கத்திடம் பதிந்து அவர்களிடம் காது குத்திக்கொண்டு அவர்கள் தரும் எண்ணை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி பூனாச்சிக்கு காது குத்த கிழவி சென்ற போது, ஒரு சில ஆடுகள் வைத்திருக்கும் எளிய மக்கள் வெயிலில் நீண்ட வரிசையில் நின்று காதுகுத்திச் செல்வதும், ஆயிரம் ஆடுகள் வைத்திருக்கும் பணக்காரர்களின் வீட்டுக்கே சென்று அதிகாரிகள் காது குத்தி வருவதுமான ராசாங்கத்தின் பாகுபாட்டைப் பற்றி மக்கள் வரிசையில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்கள். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு தன்மையாக தலை குனிந்து பதில் சொல்கிறவர்களின் குட்டிகளுக்கு மட்டுமே ஒழுங்கான முறையில் காது குத்தப்பட்டது. இல்லாவிடில், அடுத்த நாள் வர சொல்லி அலைக்கழிக்கப்பட்டார்கள். ஒரு வழியாக பூனாச்சிக்கு காது குத்திவிட்டு கிழவி வீட்டுக்கு கிளம்பினாள். கிழவனும் கிழவியும் தன் மகள் வீட்டிற்கு வருடம் ஒரு முறை திருவிழாவிற்கு செல்வது வழக்கம். இந்த முறை பூனாச்சியும் அவர்களுடன் செல்கிறாள். வீடு மேய்ச்சல் காடு என்று இருந்த பூனாச்சி முதல்முறையாக வெளியிடம் செல்கிறாள். பூனாச்சி கிழவியின் மகள் வீட்டில் பூவனைச் சந்திக்கிறாள். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கிறது. பூனாச்சி அங்கிருந்த நேரம் முழுவதும் பூவனுடன் ஆனந்தமாக செலவிடுகிறாள். திருவிழா முடிந்து கிழவியும் கிழவனும் வீட்டிற்கு புறப்படுகின்றனர். பூனாச்சிக்கு பூவனைப் பிரிய மனமே இல்லை. கிழவியின் மகள், பூனாச்சியை வேணும்னா இங்க விட்டுட்டுப்போ ஆயா என்கிறாள். பூனாச்சி அளவற்ற மகிழ்ச்சி அடைகிறாள். இங்கேயே பூவனுடன் தங்கி விடலாம் என்று நினைக்கும் போது, கிழவி , இல்ல ஆயா பெத்த பிள்ளை போல வளர்த்துட்டேன், வேணும்னா இன்னொரு ஆட்டை வச்சிக்கோ என்று மற்றொரு வெள்ளாட்டை அங்கே விட்டுவிட்டு இவர்கள் பூனாச்சியுடன் கிளம்புகிறார்கள். பதின் பருவத்தில், நா சந்தோஷமா இருந்தா இவங்களுக்கு பிடிக்காது என்று நாம் கைகாட்டும் முதல் ஆள் நம் பெற்றோர்கள்தான். பூனாச்சிக்கும் அப்படித்தான் தோன்றியது, பூனாச்சி கிழவியை சுத்தமாக வெறுக்க ஆரம்பிக்கிறாள். 

வீடு திரும்பி ஒரு வாரத்தில் பூனாச்சி பருவமடைகிறாள். அவளுக்கு இப்போது முழுவதும் பூவனின் நினைவாகவே இருந்தது. கிழவனும் கிழவியும் பூனாச்சியை கிடாயுடன் சேர்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். பூனாச்சிக்கு தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்ததா ?  பூனாச்சி மறுபடி கட்டாயம் பூவனைச் சந்திக்கிறாள். அப்படி சந்திக்கும் போது பூவனுக்கு என்ன நடந்தது? பூனாச்சி ஏழு குட்டிகள் போடும் அதிசய ஆடு என்று பகாசுரன் சொன்னதுபோல, பூனாச்சி ஏழு குட்டிகள் போட்டாளா? கடைசியில் குட்டிகளுக்கு என்ன ஆனது?  வறுமையின் பிடியில் சிக்கித் தத்தளிக்கும் கடைசி வேளையில் கிழவனும் கிழவியும் என்ன ஆனார்கள்? எப்படி உயிர் பிழைத்தார்கள்? கடைசியில் பூனாச்சிக்கு என்ன ஆனது என்பது மீதிக்கதை. 

ஒரு நூலை நாம் எந்த வயதில் படிக்கிறோமோ, அந்த வயதுக்கேற்ற மாதிரி அனுபவத்தை நமக்குக் கொடுக்கும். சிலருக்கு இது காதல் கதையாகத் தெரியலாம். 34 வயதில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான எனக்கு, இது ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, ஒரு பெண் ஒவ்வொரு பருவத்திலும் அனுபவிக்கும் ஆனந்தம், பயம், காதல், தாய்மை, வெறுப்பு, வலி என அனைத்து உணர்வுகளையும் அழகான தேன் தடவிய மொழிநடையில் ரசிக்கும்படி எடுத்துரைக்கும் ஒரு நூல். 

-செள அமுதா.

Scroll to Top