‘CHASE’ the KINDNESS

ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துவிட்டு கதை தமிழில் இருப்பது நாம் அனைவரும் பழக்கப்பட்டது தான் என்பதால் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன்.

அனு மிகவும் சுறுசுறுப்பான பெண். தன் கணவர் மற்றும் ஐந்து வயது மகன் ஹரியுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.கணவன் மனைவி இருவரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறார்கள். ஜூலை மாதம் பள்ளி கோடை விடுமுறை என்பதால், தினமும் காலை எழுந்ததும் அனுவும் ஹரியும் அவர்கள் வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய ஏரியை சுற்றி நடைபயணம் செல்வது வழக்கம். வீட்டிலிருந்து புறப்பட்டு ஏரியை சுற்றித் திரும்ப வீட்டுக்கு வர 45 நிமிடங்கள் ஆகும்.சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். 

அன்று சனிக்கிழமை அனுவுக்கு அலுவலக வேலை ஓய்வு நாள் என்பதால், காலை எழுந்ததும் தன் மகன் ஹரியுடன் நடைபயணத்தை தொடங்கினாள். அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி ஒரு கறுப்பின அமெரிக்க பாட்டியின் வீடு இருந்தது. அவர் தனிமையில் வசிப்பவர். ஹரி தாத்தா பாட்டி இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பதால், அவனுக்கு வயதான பாட்டிகள் என்றால் மிகவும் பிரியம். இவர்கள் இருவரும் பாட்டியின் வீட்டை கடக்கும்போது, அவர் இவர்களிடம் நடைபயணம் முடிந்து திரும்பி வரும்போது, தன் வீட்டிற்கு வந்து மாம்பழங்கள் வாங்கிச் செல்லும்படி கூறினாள். இது முதல்முறை அல்ல. அவள் வீட்டின் பின்னால் மாமரம் ஒன்று உள்ளது. போன வருடம் இதே கோடை காலத்தில் 5 முறை மாம்பழங்களை அனுவின் வீட்டிற்கே வந்து கொடுத்துவிட்டு போனாள் அந்த பாட்டி. இந்த வருடம் இன்னும் வயதாகிவிட்டதால் வந்து வாங்கிச் செல்லும்படி கேட்டுக்கொண்டாள். சரி என்று சொல்லிவிட்டு இருவரும் தொடர்ந்து நடந்தார்கள். ஏரியை தாண்டி சிறிய குடியிருப்புகள் நிறைய இருந்தன. அந்த பகுதிக்குள் நடந்து வரும்போது எதிரில் ஒரு இளம்பெண் தன் 4 வயது மகனுடன் இரண்டு நாய்களை அழைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள். ஒன்று labrador இனத்தைச் சேர்ந்த பெரிய நாய். இரண்டாவது சிறிய நாய்குட்டி போல இருந்தது. அதன் கழுத்தில் KOBY என்று அதன் பெயர் பொறித்த டாலர் தொங்கவிடப்பட்டிருந்தது.

   ஹரிக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்காகவே சென்ற வருடம் இந்தியா சென்றபோது சுப்பிரமணி , whitey என்று இரண்டு தெரு நாய்களுக்கு biscuit  வாங்கி போட்டு வளர்த்தாள் அனு. அவையும் இவர்களிடம் நன்றியுடன் இருந்தன. இவர்கள் அங்கே நடைபயணம் செல்லும்போது காவலாளி போல கூடவே எப்போதும் செல்லும். முதல்முறையாக whitey  இவர்கள் பின்னால் வருவதை பார்த்த போது, ஒருவர் நம்மிடம் நன்றியுணர்வை காட்டும் பொழுது எவ்வளவு பெருமிதமாக உள்ளது என்று பேசிக்கொண்டார்கள்.

   சரி, அமெரிக்காவிற்கு வருவோம். நாய்கள் இரண்டையும் எதிரே பார்த்ததும் ஹரிக்கு மிகுந்த உற்சாகம். சட்டென பொசுபொசுவென்று இருந்த labrador நாயை தடவ ஆரம்பித்து விட்டான். குழந்தைகள் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. நாமும் சிறு வயதில் அப்படித்தான் இருந்திருப்போம். வயது ஆக ஆக போன தசாப்தத்தில் நடந்ததிலிருந்து நேற்று நடந்தது வரை அனைத்தையும் அனுபவம் என்ற பெயரில் மூட்டையாக மனதில் சுமந்துகொண்டிருக்கிறோம். சில சமயங்களில் அது சாதகமாக இருந்தாலும், பல சமயங்களில் நமக்கு அது சாபமாகவே அமைந்து விடுகிறது. 

அழுத்தி பிடிக்காதே , நாய் கடித்துவிடப் போகிறது. மெதுவாக தடவிவிடு என்று அனு பதற்றத்துடன் தன் மகனுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். அதை உணந்த இளம்பெண், பரவாயில்லை நாய் ஒன்றும் செய்யாது. எங்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள், இருவரும் இவனை இதைவிட கடினமாகவே கையாளுவார்கள். அது இவனுக்கு பழகிவிட்டது என்று கூறினாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவளின் நான்கு வயது மகன், ‘momma , I rub him really hard. See he won’t rumble. You can rub him hard, he likes it ‘ என்றான் ஹரியிடம். ஹரி வேகமாக நாயைத்தடவினான். திடீரென நாய் வேகமாக நடந்து சற்று தள்ளி புல்வெளியில் சென்று பின்னங்கால்களை தளர்த்தி அமர்வதைப் போன்ற பாவனையில் நின்று கொண்டிருந்தது. தான் அழுத்தி தடவியதால்தான் நாய் கோபித்துக்கொண்டு விட்டதாக எண்ணி அம்மாவிடம் கேட்டான் ஹரி. இளம்பெண், ‘ No , the dog is going to do its business ‘ என்று கூறினாள். அவளின் நான்கு வயது மகன், ‘ momma the dog is pooping ‘ என்றான். ஹரி சற்று சாந்தமடைந்தான். வேலை முடிந்ததும் நாய் மறுபடி எங்கள் அருகில் வந்து நின்றது. இளம்பெண் , ‘ CHASE sit down and stay ‘ என்றதும் நாய் நடைபாதையின் ஓரத்தில் அமர்ந்தது. அதன் கழுத்தின் மேல் பகுதியில் CHASE என்று எழுதப்பட்ட வார் மாதிரியான அரைக்கச்சு வயிற்றை சுற்றி கட்டப்பட்டிருந்தது.

  இளம்பெண் தன் கால்சட்டையிலிருந்து நெகிழி ஒன்றை எடுத்து புல்வெளியை நோக்கி நடந்தாள். நெகிழியை உறைபோல் கையில் மாட்டி, நாய் மலத்தை எடுத்து கையை வெளிப்புறமாக எடுத்து முனையில் முடிச்சு ஒன்று போட்டாள். அதுவரை ஹரி CHASE உடன் விளையாடிக்கொண்டிருந்தான். CHASE மல்லாக்க படுத்து தன் காலை தடவும்படி ஹரியிடம் நீட்டியது. ஹரியின் கால்களை அன்பாக நக்கியது. கூச்சத்தில் ஹரி சிரித்தான். CHASE ன் திடீர் அன்பு ஹரிக்கு மிகவும் பிடித்திருந்தது. தரையில் CHASEன் அருகில் அமர்ந்துகொண்டான். அது இவன் முகத்தில் நக்கியது. ‘ He likes you, see he is kissing ‘ என்றாள் இளம்பெண். ‘ CHASE now kiss me , come here , kiss me ‘ என்று அதன் முகத்தை தன் பக்கம் இழுத்தான் இளம்பெண்ணின் நான்கு வயது மகன். இதற்குள் 20 நிமிடம் கழிந்துவிட்டிருந்தது. நேரம் ஆகிறது என்று சொல்லியும் ஹரிக்கு CHASE ஐ வட்டு வர மனமே இல்லை. மனிதர்கள் அனைவரும் கைப்பேசிக்குள் மூழ்கிவிட்ட இந்த காலத்தில், முத்தங்களும் அணைப்பும் ஸ்பரிசமும் குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மறந்து விட்டோம். ஹரிக்கு CHASE ஐ பிரிய மனமில்லை என்பதை உணர்ந்த இளம்பெண் ‘ we will see you tomorrow my new friend ‘ என்றாள். அரைமனதுடன் எழுந்து அவர்கள் அனைவருக்கும் bye சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான் ஹரி.  இவ்வளவு நேரமும் KOBY  எங்களைச் சுற்றி அங்கும் இங்கும், தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில் அலைந்துகொண்டிருந்தது. 

  வீட்டிக்கு திரும்பி செல்லும் வழி எங்கும் ஹரி CHASE ஐ பற்றியே பேசிக்கொண்டிருந்தான். CHASE ஐ போலவே அனுவின் கையை இரண்டு முறை நக்கினான்.  அன்போ , கோபமோ குழந்தைகள் எதையுமே தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் இருந்து எளிதில் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். வீட்டிற்கு வந்து கதவை திறந்ததும்,  உணவருந்தும் மேசையில் நன்கு பழுத்த மஞ்சளும் சிவப்பும் கலந்த 11 மாம்பழங்கள் இருந்தன. அப்போதுதான் அனுவிற்கு பக்கத்துவீட்டு பாட்டி திரும்பிச்செல்லும்போது மாம்பழங்கள் வாங்கிச்செல்லும்படி சொன்னது நினைவுக்கு வந்தது. நேரமானதால் அவரே வந்து வீட்டில் கொடுத்துவிட்டு சென்றதாக அனுவின் கணவர் கூறினார். நம்மைச்சுற்றி அன்பு, நட்பு, நன்றியுணர்வு என்று அனைத்தும் சூழ்ந்திருக்கும்போது, உண்மையில் மனித வாழ்வு மகத்தானதாகவே தோன்றுகிறது.

-செள அமுதா.

1 thought on “‘CHASE’ the KINDNESS”

Comments are closed.

Scroll to Top